இவரை கண்டு நடுங்குது சீனா!

நந்திவர்மன்

ஆசிய வல்லரசான சீனாவுக்கு ஒரு சிம்ம சொப்பனம் என்றால் நிச்சயமாக அது ‘தலாய்லாமா’தான். தலாய்லாமாவைக் கண்டு அது அநியாயத்துக்கு நடுங்கிக்கொண்டிருக்கிறது.

திபெத்தின் ஆன்மீகத் தலைவரான இவருக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்திக்கொள்ளுமாறு, அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளதே இதற்குச் சரியான சான்று. ‘நவம்பர் 15 முதல், 18 வரை ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஒபாமா, தலாய்லாமாவை சந்தித்துப் பேசலாம்’ என்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. இதையடுத்து கருத்து வெளியிட்ட சீன வெளி விவகாரத்துறை அமைச்சர் கிங்காங், ”தலாய்லாமாவை எந்தவொரு நாட்டின் தலைவரும் சந்தித்துப் பேசுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. தலாய்லாமா சீனாவின் அடிமை மாநிலம் ஒன்றின் தலைவர் என்பதை ஒபாமா ஒப்புக்கொள்ளவேண்டும்” எனக் கூறியிருக்கிறார். லாமாவைக் கண்டு சீனா ஏன் பயப்படவேண்டும்?

கடந்த மாதம் 18 மற்றும் 19-ம் தேதிகளில், இத்தாலியின் தலைநகரமான ரோம், புலம்பெயர்ந்த திபெத் பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைந்திருந்தது. திபெத் பாராளுமன்ற சபாநாயகர் பென்பா தெசாஜீங் தலைமையிலான பதினெட்டு திபெத்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் இந்தியாவிலிருந்து சென்றவர்கள். சீனா வசம் திபெத் இருந்தாலும், அதை மீட்டெடுக்கப் போராடும் புலம்பெயர் திபெத் அரசும் அதன் பாராளுமன்றமும் இந்தியாவில்தான் உள்ளது.

 முன்னதாக, கடந்த அக்டோபர் முதல் தேதியன்று, திபேத்தை அடிமைப்படுத்தி, அம்மக்களின் மதத்தை, பண்பாட்டை அழித்தொழிக்கும் சீனாவை கண்டித்து இமாசலப் பிரதேசம் தர்மசாலாவில், திபெத் அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 ஏழாம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவின் மிகப் பெரிய பேரரசாக திபெத் விளங்கி வந்தது. மன்னர் ‘சாங்டெசென் காம்ஃபோ’ தலைமையிலான திபெத் ராணுவத்தில் 28,60,000 வீரர்கள் இருந்தார்கள். இரண்டாயிரமாண்டு வரலாறுடைய திபேத், விடுதலையுடனும் வீறுடனும் விளங்கி வந்த நாடு என்பதில் சந்தேகம் இல்லை. 1914-ல் பிரிட்டன், சீனா, திபெத் ஆகிய நாடுகள் இணைந்து கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தமானது, திபெத் ஒரு சுதந்திர நாடென்பதை உறுதி செய்கிறது.

ஆனால், 1949-ல் தொடங்கி 1950-ம் ஆண்டுகளில் சீனா, திபெத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகுதான் பிரச்னை ஆரம்பமாயிற்று. தலாய்லாமா, அருணாசலப் பிரதேசம் போவதை சீனா எதிர்க்கிறது. ‘தலாய்லாமா எங்கள் விருந்தினர். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் போக அவருக்கு உரிமை உண்டு’ என்கிறார் மன்மோகன் சிங். ஆனால், திரைக்குப் பின்னுள்ள காரணங்கள் வேறு. இன்றைய அருணாசலப்பிரதேசம் உருவானது 1987-ல்தான். ‘மக்மோகன் கோடுவரை இந்திய எல்லை’ என இந்தியா அதிரடி முடிவு எடுத்திராவிட்டால், திபெத்தை சீனா விழுங்கியபோதே அருணாசலப் பிரதேசத்தையும் சேர்த்து விழுங்கியிருக்கும்.

1914-ம் ஆண்டு மக்மோகன் உடன்பாட்டில் கையெழுத்திட்டதன் மூலம், 13-வது தலாய்லாமாதான் அருணாசலப் பிரதேசத்தை பிரிட்டிஷ் இந்தியாவுக்கு அளித்தவர். இப்போது சர்ச்சைக்குரியதாக கருதப்படும் தவாங் பகுதியும் அருணாசலப்பிரதேசத்தின் ஒரு பகுதியே. 1914-ம் ஆண்டு உடன்படிக்கையை இன்றுவரை ஏற்க மறுக்கும் சீனா, மொத்த அருணாசலப்பிரதேசம் மீதும் உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடுவில் திபெத் ஒரு சுதந்திர நாடாக இருந்திருந்தால் இந்திய-சீனப் பகைமையே ஏற்பட்டிருக்காது.

 இன்று புலம்பெயர்ந்த திபெத்தியர்கள் இந்தியாவில் 1,01,242 பேரும், நேபாளத்தில் 16,313 பேரும், பூடானில் 1,883 பேரும், உலகின் ஏனைய நாடுகளில் 25,712 பேருமாக இருக்கிறார்கள். மொத்தமுள்ள அத்தனை பேரின் தலைவராக தலாய்லாமா இருந்து வருகிறார். இந்தியப் பிரதமர் பூசி மெழுகுவதுபோல் அவர் விருந்தினர் அல்ல. தங்களுக்கென்று சுதந்திர நாடு கோரி, இழந்த நாட்டை மீட்க இந்தியாவின் மறைமுக உதவியுடன், இந்திய மண்ணில் புலம்பெயர்ந்து அரசு நடத்துபவர்தான் தலாய்லாமா. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திபெத்தியர்கள் வாக்களித்து, இந்த அரசைத் தேர்வு செய்கிறார்கள். இந்த அரசாங்கத்தில் மதம் மற்றும் -பண்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், நிதி, பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் மற்றும் அயலுறவு அமைச்சம் ஆகியவை இருக்கின்றன. புலம்பெயர் திபெத் அரசின் தூதரகம் டெல்லியில் இருக்கிறது. காட்மாண்டு, நியூயார்க், லண்டன், ஜெனிவா, மாஸ்கோ, பிரஸ்ஸல்ஸ், கான்பெர்ரா, டோக்கியா மற்றும் தாபே போன்ற இடங்களிலும் தூதரகங்கள் இருக்கின்றன. தனக்கென ஒரு ஆன் லைன் டி.வி.யையும் திபெத் அரசு நடத்தி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் திபெத்திலிருந்து தப்பி ஒடி வந்த தலாய்லாமா, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் இல்லத்தில் தங்கினார். தங்கிய இடத்தில் மரக்கன்று நட்டார். இதோ! 2009-ம் ஆண்டு, நவம்பர் 12-ம் தேதியும் தவாங் இல்லத்துக்கு வந்தார். இன்னொரு மரக்கன்றை நட்டார். அன்று நட்டது மரமாகிவிட்டது. இன்று நட்டதும் மரமாகிவிடும். இப்படித்தான் திபெத்தியர்களின் விடுதலைக் கனவு, இந்தியாவால் நீருற்றி வளர்க்கப்படுகிறது.

 திபெத் விடுதலைப் போரானது, உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படுவதற்குப் பிரதான காரணம் தலாய்லாமா. ”நீங்கள் தான் கடைசி தலாய்லாமாவா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. “அகதியாக இந்தியாவுக்குள் வந்து, நான்கு வருடங்கள் கடந்த பிறகு, 1963-ல் திபெத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினோம். ஜனநாயக முறையை எங்கள் அரசியல் சட்டம் ஏற்கிறது. நாளை திபெத் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு விரும்பினால், தலாய்லாமா பதவியைக்கூட பறிக்கலாம் என்று அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி இருக்கிறோம். நான் இறந்தால், வேறொரு தலாய்லாமாவை திபெத் மக்கள் தேர்ந்தெடுக்கலாம். அல்லது அந்தப் பதவியே இல்லாமல்கூட செய்யலாம். அது மக்களின் விருப்பம்” என்றார். சுதந்திர திபெத் கேட்டு விடாப்படியாக போராடியவர்கள் இன்று களைத்துப் போய்விட்டனர். சீன மக்கள் குடியரசிற்குள், உச்சபட்ச சுயாட்சியுடன் திபெத் இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கு தலாய்லாமாவும் வந்துவிட்டார். ஒரு விதத்தில், இதே நிலைமைதான் ஈழத் தமிழர்களுக்கும். மாநில சுயாட்சி கேட்டு, பின்னர் விடுதலைப் போரை நடத்தி, இறுதியில் ராணுவ ரீதியாகவே தோற்றுவிட்டார்கள். எனவே, தங்கள் விடுதலைக் குரலை புலம்பெயர் அரசு மூலம் ஓங்கி ஒலிக்கத் துடிக்கிறார்கள்.

 மதத்தால் ஒன்றுபட்ட திபெத்தியர்கள் தனி நாடு கேட்கிறார்கள். மதத்தால், இனத்தால், சாதியால் ஒன்றுபடாத தமிழர்களும் கேட்கிறார்கள். இரண்டில் எது சாத்தியம்? திபெத்திய புத்த மதம் பல பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கிறது. இதில் ‘நைங்மா, கர்ம தக்யூ, சாக்கியா மற்றும் கெலுக்’ ஆகிய நான்கு பிரிவுகள் முக்கியமானவை. திபெத்திலும் பூடானிலும் புத்த மதத்தைப் பரப்பிய பத்மசாம்பவா என்ற இந்தியத் துறவியால் உருவாக்கப்பட்டது ‘நைங்மா’. சிக்கிமில் உள்ள தர்ம சக்ரா மடத்தில் இயங்குவது ‘கர்ம தக்யூ’. கோன் அரச மரபினரின் வழியில் வந்தவர்களால் கட்டுவிக்கப்பட்டது ‘சாக்கியா’. நான்காவது ‘கெலுக்’. இதன் தலைவர் பதவியில் தற்போது இருப்பவர்தான் தலாய்லாமா. மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து வருபவரே தலாய்லாமா என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள். 16-ம் நூற்றாண்டில் 5-வது தலாய்லாமா மற்ற குழுக்களை தோற்கடித்து நாட்டை ஒன்றுபடுத்தி ஆண்டார். அவரது மறுபிறப்பாக கருதப்படுவரே தற்போதுள்ள 14-வது தலாய்லாமா. இவரது இயற்பெயர் ‘டென்ஜின் கயாட்சோ’. ஆக, மறுபிறப்பும் மத நம்பிக்கையும்தான் திபெத் சுதந்திர போரை தளராமல் ஊக்குவித்து வருகின்றன. இத்தகைய காரணங்களால்தான் தலாய்லாமாவைக் கண்டு சீனா பதறுகிறது.

Advertisements