நதிகளை சிறைபிடிக்கும் சீனா

நதிகளை சிறைபிடிக்கும் சீனா

 நீரின்றி தவிக்கப்போகும் இந்தியா ……. N.Nandhivarman

விண்ணை முட்டும் அளவுக்கு வெள்ளம் ஓடினாலும், காசு கொடுத்து தண்ணீர் குடிக்கிற நிலமைக்குதான் இந்திய மக்களுக்கு! இங்கே தேசிய நதியை மாநில அரசு சிறை பிடித்து வைத்திருக்கும் அவலம் தமிழனுக்கு. இந்நிலையில், வருங்காலப் பிரதமரான ராகுல்காந்தி தமிழகம் வந்தார். ”நதிநீர் இணைப்புத் திட்டம் ஆபத்தானது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்” என்றார். இது ராகுல்காந்தியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸார் சப்பைக் கட்டு கட்டினாலும், ராகுலின் அம்மா சோனியா இதை 2004-ம் ஆண்டே உதிர்த்துவிட்டார்.

ஒரு விஷயம் தெரியுமா? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பல கோளாறுகள் இல்லாததால், வட இந்திய நதிகள் அனைத்தும் வறண்டுபோகும் அபாயத்தில் உள்ளது. காரணம் சீனா. ”விண்வெளியில் இருந்து படம் பிடித்தால், தெளிவாகத் தெரிவது எகிப்திய பிரமிடுகளும் பிரம்மபுத்ரா நதியுமே!” என்று சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை சீனப் பெருஞ்சுவர்தான் என்று நம்பி வந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். பிரம்மபுத்ரா திபெத்தில் உற்பத்தியாகிறது. அதன் நீரைத் திசை திருப்பி, சீனா தன்னுடைய யாங்சி நதியுடன் இனைப்பதால், இனி வட மாநிலங்கள் தண்ணீரின்றி தவிக்கப்போவது நிச்சயம். விமானப் பயணம் மேற்கொண்டவர்களுக்குத் தெரியும் – கோடை காலங்களில் பிரம்மபுத்ராவில் தண்ணீரே இல்லை என்பது. இது சீனாவின் செய்கையால் ஏற்பட்டது. எல்லை தாண்டி வில்லங்கம் செய்யும் அதன் கோரமுகம் நமக்கெல்லாம் தெரியும்.

ஆனால், ‘உலக மக்கள்தொகையில் பாதிப்பேர் பயன்படுத்தும் நதிகளின் நீரை அது கபளீகரம் செய்வது குறித்து இந்திய அரசுக்கு தெரியுமா?’ என்றால், தெரியும். ஆனால் தெரியாது. அணைகள் பற்றிய உலக ஆணையம் 2003-ம் ஆண்டு ஒரு விவரம் வெளியிட்டது. அதன்படி, நாடு முழுக்க 22,000 அணைக்கட்டுகளை நிறுவி உலகில் முதலிடம் வகிக்கிறது சீனா. இந்தியாவோ 4,291 அணைக்கட்டுகளுடன் மூன்றாமிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் இருப்பது 6,575 அணைக்கட்டுகள். ‘அணை கட்டுவது தவறா? விவசாயம் வளர்ச்சி பெறத்தானே!’ என்று சிலர் வாதிடலாம். நம் சோழ மன்னர்கள் கட்டியது அணைகள் அல்ல, நீர்த்தேக்கங்கள். தமிழனின் பொறியியல் அறிவை பூமிக்கு உரைப்பவை. ஆனால், சீனா கட்டி வரும் கல்லணைகள் ஆபத்து நிறைந்தவை. சிந்து, பிரம்மபுத்ரா, யாங்சி ஆகிய நதிகள் திபெத்தில்தான் உற்பத்தியாகின்றன. உலக மக்கள்தொகையில் பாதி இன்று சீனா வசமுள்ள திபெத்தின் ஆற்றுப்படுகைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நதிகளின் குறுக்கே சீனா அணைகள் கட்ட ஆரம்பித்து இன்று வரை 23 வருடங்கள் ஆகின்றன.

 இந்தியாவோ இதன் ஆபத்து குறித்து அலட்சியமாக இருக்கிறது. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டமும் ஆசிய பொறியியல் நிறுவனமும், ‘சீனாவின் ‘மேகாங்’ நதியின் குறுக்கே எட்டு அணைகள் வருவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பேரி டர் காத்துள்ளது’ என எச்சரித்திருக்கிறது. ‘தாய்லாந்து, லாவோசு, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் 60 மில்லியன் மக்கள் தண்ணீரின்றி தவிப்பார்கள். விவசாயமும் மீன் பிடி தொழிலும் முற்றாக அழியும்’ என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 1993 முதல் 2004 வரை மேகாங் நதியின் குறுக்கே மூன்று அணைகள் கட்டப்பட்டன. நான்காவது அணை 2012-ல் முடிவடைய உள்ளது. நான்கு பில்லியன் டாலரில் கட்டப்படும் இது, உலகின் மிக உயரமான அணையாக 292 மீட்டரில் உயர்ந்து நிற்கும். இதன் ஆபத்தை உணர்ந்த தாய்லாந்து, லாவோசு, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகள், 1995-ம் ஆண்டு ‘மேகாங் நதி ஆணையம்’ ஒன்றை உருவாக்கி பிரச்னையைத் தீர்க்க முயன்று வருகின்றன. தண்ணீர் தாதா சீனாவோ, ‘ஆணையத்தில் இணைய முடியாது. கட்டப் பஞ்சாயத்துக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும்’ என்று ஆட்டம்போடுகிறது. இதன் காரணமாக, மக்களைத் திரட்டிக் கையெழுத்து இயக்கம் நடத்திய தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜஜிவா, தண்ணீரைத் தடுக்கும் சீனாவுக்கு கடந்த ஜூன் மாதம் கண்டனக் கடிதமே கொடுத்துவிட்டார். மன்மோகன் சிங்கோ மௌனசாமியாராக இருக்கிறார்.

 இப்போது இந்தியா தவிர்த்து தெற்காசிய நாடுகள் அனைத்தும் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கிவிட்டன. இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவரும் அயலுறவுக் கொள்கையின் மேதையுமான ஜி.பார்த்தசாரதி, ‘கடல் எல்லையை வரையறை செய்வதில் மற்ற நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் ‘இதுதான் உன் நாட்டு எல்லை’ என தெற்காசிய நாடுகள் மீது சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார். சர்வதேச நதிகள் அமைப்பின் தலைவர் அவிவா இமாஃப், ‘ஆசியாவின் பெரிய நதிகள் அனைத்தும் திபெத்தில் உற்பத்தி ஆகின்றன. இந்த நதிகள் மீது சீனா கட்டும் அணைகளால் கடைமடைப்பகுதி நாடுகள் பாலைவனமாகும்’ என எச்சரிக்கிறார்.

இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்க்கும் முன், பர்மாவுக்கு கொக்கோ தீவுகளை தாரை வார்த்தது இந்தியா. இது அந்தமானில் இருந்து 45 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. அந்த கொக்கோ தீவுகளில் இப்போது ரஷியத் தயாரிப்பு ராடார்களைப் பொருத்தி, ஒரிசா வின் சண்டிப்பூர் ஏவுகணைத் தளத்தை கண்காணித்துக்கொண்டிருக்கிறது சீனா. இதை லண்டனில் உள்ள ‘இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்ட்ரடஜிக் ஸ்டீல்ஸ்’ அமைப்பும் உறுதி செய்கிறது. ‘வங்கக் கடலுக்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில் செல்லும் கப்பல்களை சீனா கொக்கோ தீவுகளில் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது.’ என்கிறது அந்த அமைப்பு. மேலும், மியான்மர் நாட்டின் ஆறு துறைமுகங்களில் கப்பல் படைத்தளம் அமைக்கவும் சீனா ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதேபோல், வங்க தேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ள அந் நாட்டு அரசு சீனாவுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் (நம் குஜராத் எல்லை அருகே) ஆழ்கடல் துறைமுகம் அமைக்க 250 மில்லியன் டாலர் செலவழித்திருக்கிறது. தென்னிலங்கையில் அம்பன் தோட்டாவில் படைத்தளம் அமைத்து காலூன்றியுள்ள சீனா, நம்மை நிம்மதியாக இருக்க விடாது. இப்படியாக வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் வங்கக் கடலுக்கும் இந்து மாக்கடலுக்கும் சம்பந்தமே இல்லாத சீனா காலூன்றிவிட்டது. மேலும், மாலத்தீவு அருகே மரோ தீவை 25 ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டதன் மூலம் அரபிக்கடலையும் ஆக்கிரமித்துவிட்டது. ஒருவேளை சீன-இந்தியப் போர் ஏற்பட்டால்… வங்கக் கடல், இந்துமாக் கடல், அரபிக் கடல் என மூன்று முனைகளிலும் மூக்குடைபடும் இந்தியா.

சீனாவின் ராணுவ பலம் என்னவென்பது கடந்த அதன் அறுபதாவது தேசிய தினமான அக்டோபர் 1-ம் தேதியே உலகத்துக்குத் தெரிந்துவிட்டது. தரையில் 30 படைப் பிரிவுகளும் வானில் 12 படைப்பிரிவுகளுமாக உலகின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பாக அது இருந்தது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு தன் பலத்தை அது கோடிட்டுக் காட்டியது. இந்தியா பற்றி அது கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வடக்கு சிக்கிமில் எல்லை தாண்டி வந்து சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவமே இதற்கு சான்று. ஆனால், இந்தியாவும் சீனாவும் இதைச் சுத்தமாக மறுக்கின்றன. ஒரு படி மேலேபோன இந்தியா, ‘இதுபோன்ற செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் எச்சரித்திருக்கிறது. சரி, நாம் தண்ணீர் விஷயத்துக்கு வருவோம். அணைகள் போதாதென்று, வட இந்தியாவை பாலைவனமாக்குவதற்காக திபெத்தில் மட்டும் 750 நீர்மின் நிலையங்களைக் கட்டிவருகிறது சீனா. இதற்காக 244 மில்லியன் பவுண்ட் பணத்தை முதலீடு செய்திருக்கிறது. அப்படியானால், நிலவில் தண்ணீர் கண்டுபிடித்துள்ள இந்தியா இனி அங்கிருந்துதான் வட இந்தியாவுக்கு குடிநீர் கொண்டுவர வேண்டும். மேலும், வெள்ளப்பெருக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், ‘நமக்கு செலவு மிச்சம்!’ என்று மத்திய – மாநில அரசுகள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். முடிவில், வறண்ட நதிகளை இணைப்பது வெட்டிச் செலவு என்பதால் நதிநீர் இனைப்புத் திட்டமும் கைவிடப்படும். ஆக, இனி ஏகப்பட்ட அணைகள், 750 நீர்மின் நிலையங்கள் மூலம் சீனா ஒளிரும். வறண்டு போகும் வட இந்தியாவும் இதர தெற்காசிய நாடுகளும் வறுமையின் பிடியில் மூழ்கும்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s